திங்கள், 17 டிசம்பர், 2012

யஃஜூஜ் மஃஜூஜ்.


யஃஜூஜ் மஃஜூஜ்.
உலகம் அழியக்கூடிய காலம் நெருங்கும் போது ஏற்படும் பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதி
ல்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.


அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரயிலான வசனங்கள் கூறுகின்றன.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை.உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் இக்கூட்டத்தினால் முற்றுகையிடப்படுவார்கள்.
உலகையே கைப்பற்றி விட்டோம் என்ற மமதையில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறு வார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான்,இதை பார்த்து அவர்கள் வானையும் பிடித்து விட்டோம் துள்ளி குதிப்பார்கள்.
ஈஸா[அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஸ்லிம்களோடு தூர்சீனா மழையில் இருப்பார்கள் அங்கு இவர்கள் செல்ல முடியாது,, அன்று ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறி நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.

"
பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடு''என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் ஒரு கூட்டம் நிழல் பெறுவார்கள். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் வாழும் போது தான் உலகம் அழியும் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக