சனி, 20 அக்டோபர், 2012

தொலைக்காட்சியை மூடி தூய குர்ஆனை திறப்போம்.


அன்பு உள்ளங்களே! இன்று சமூக ஆரோக்கியத்தை கெடுத்து அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அநேக தீமைகள், தவறுகளாக விளங்கிக் கொள்ளப்படுவதை விட அதுதான் வாழ்வின் அமைதிக்கு காரணம் என்று கருதப்படுகிறது,இந்த சிந்தனை விஷத்தை அருமருந்தாக கருதுவதற்கு சமமானதாகும்,
மலத்தை மணம் கமழும் சந்தனமாகவும்,அக்னியை ஆபரணங் களாகவும்,உயிர் பறிக்கும் விஷப்பாம்பை வெற்றி மாலையாகவும்,கல்லிப்பாலை கசாயமாகவும்,உடைந்த கண்ணாடி துண்டுகளை வைரங்களாகவும் ஆக்கிக்கொண்டு வடிகட்டிய முட்டாள்தனத்தோடு வாழ்பவர்களை அறிவாளிகள் என்று சொல்வோமா?அல்லது அறிவிலிகள் என்று சொல்வோமா?வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணி வெற்றி மிதப்போடு வாழும் பல பேர், மரணம் வருபோதுதான் தனது தோல்வியை உணருகிறார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ
[மனிதர்களே!]உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்பாகவே உங்கள் இறைவனின் பக்கம் திரும்பி அவனுக்கு முற்றிலும் வழிபட்டு விடுங்கள்!-39:54.
அல்லாஹ்வின் இந்த கட்டளை நமது வாழ்வை சீர்படுத்த  தூண்டக்கூடியதாக அமைந்துள்ளது.ஆனால் இதற்கு செவி தாழ்த்துபவர் யார்?
அன்பானவர்களே!சமூகம் இன்று அமைதி இழந்து வாழ காரணம் நமக்குள் உருவாகி விட்ட அதிகமான தீமைகள்,இந்த தீமைகள் பல காரணங்களால் உண்டாகலாம் ஆனால் இந்த தீமைகள் அதிகமாக “டி. வியின் மூலமே உண்டாகின்றன என்றால் அது மிகையல்ல.
ஒரு காலத்தில் நம் வீடுகள் குர்ஆன் ஓதப்படும் மதரஸாக்களாக தெரிந்தன,ஆனால் இன்று இருபத்தி நான்கு மணி நேர சினிமா தியேட்டர்களாக ஆகி விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
கலிமா ஓதி தொட்டில் ஆட்டும் காலம் மலை ஏறிப்போய் கேடு கெட்ட சினிமா பாடல்களை பாடி தாலாட்டும் தரம் கெட்ட கலாச்சாரம் அரங்கேறி விட்டது.  
இந்த அருள்மறை அன்றைய கற்கால காட்டரபிகளையும் சொர்க்கத்து மலர்களாக மாற்றியது ஆனால் இன்று இந்த டெலிவிஷன் நல்ல குடும்பத்து மலர்களையும் நரக கொள்ளிகளாக மாற்றி விடுகின்றன.
கட்டுக்கோப்போடு வாழும் கண்ணியமான பெண்களை கற்பனை உலகில் சிறகடித்து பறக்க வைத்து கட்டுப்பாட்டை மீறுவதற்கு கற்றுக்கொடுக்கிறது.
குடும்ப குத்து விளக்குகளாகிய தாய்மார்களை கொழுந்து விட்டு எரியும் நரகமாக ஆக்கி குடும்ப நிம்மதியை கரியாக்கி விடுகிறது.
சீரியல்களில் மூழ்கி போனதால் சின்னஞ்சிறிய குழந்தை பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரியாமல் நாள் முழுதும் தேடிய செய்தி நம் தாய்மார்களின் உச்சகட்ட பொடுபோக்கை காட்டுகிரதல்லவா?
தொலைக்காட்சியின் முன் குடும்பமே வாய் பிளந்து அமர்ந்திருக்க விருந்தாளியை போல் ஹாயாக உள்ளே நுழைந்த திருடன் அனைத்தையும் அள்ளிச்சென்றதையும் அறியாது அனாச்சாரத்தில் ஐக்கியமாகிப்போன அம்மாமார்களின் அவலத்தை எங்கே சென்று சொல்வது?
இறை பக்தைகளாக வாழ வேண்டியவர்களை நிறை பைத்தியங்களாக மாற்றியது எது?சீர்கெடுக்கும் சீரியல்கள் அல்லவா?
அது மட்டுமா? நமது அன்பு செல்வங்களாகிய பிள்ளைகளை பேடிகளாக,பொருக்கிகளாக,கேடிகளாக,குடிகாரர்களாக,ஆக்கிபொறுப்பற்ற போக்கிரிகளாக சமூகத்தில் உலாவ விட்ட உலக மகா சேவை பெட்டகம் இந்த தொல்லைக்காட்சி பெட்டியல்லவா?
அன்பு உள்ளங்களே!இந்த அவலங்கள் அனைத்தயும் அழித்து குடும்பத்தில் குதூகலத்தையும் சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் சங்கையான பிள்ளைச்செல்வங்களையும் இவ்வுலகில் நமக்கு தந்து மறு உலகிலும் நம் ஈடேற்றத்திற்கு காரணியாக இருப்பது எது தெரியுமா?
அதுதான் அகிலம் சிறக்க வந்த அருள் மறை அல்லாஹ் நமக்களித்த உயர் மறை அல் குர்ஆன் மஜீத்,
உலகில் நாம் பெற்றுள்ள கோடிக்கணக்கான செல்வங்களை விட அற்புத செல்வம் இந்த குர்ஆன்தான்.இதை நான் சொல்லவில்லை அன்பர்களே!அகிலங்களை படைத்து இரட்சிக்கும் பேரரசன் அல்லாஹ் சொல்கிறான்.
   قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
10:58அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இந்த குர்ஆன் வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானதுஎன்று (நபியே!) நீர் கூறும்.

நல்வழி காட்ட வந்த நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மொழியை பாருங்கள்!
இந்த ஹதீஸ் சஹீஹ் முஸ்லிமில் வந்துள்ளது:
 اقْرَؤوا الْقُرْآنَ , فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا لأَصْحَابِهِ
 [முஃமின்களே!] குர்ஆனை ஓதுங்கள்! அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்காக பரிந்து பேசும். 
மற்றொரு நபி மொழியில்:
 الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ
குர்ஆனும் நோன்பும் மறுமையில் அடியானுக்காக பரிந்துரை செய்யும்.என்று வந்துள்ளது. [நூல்:அஹ்மத்]
அது மட்டுமா?
குர்ஆனை ஓதி அதை பாதுகாத்து அது ஹலாலாக்கியதை ஹலாலாகவும் அது ஹராமாக்கியதை தவிர்ந்து கொண்டும் வாழ்ந்த மனிதனை அல்லாஹ் சுவனத்தில் நுழைய வைப்பது மட்டுமில்லாமல் நரகம் விதியாகிய பத்து மனிதர்களை அவரது பரிந்துரையின் பேரில் சுவனத்திற்கு அழைத்து செல்லும் அனுமதியை அல்லாஹ் வழங்குவான்.என்று அண்ணல் எங்கள் ஆருயிர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளினார்கள்.[நூல்:இப்னு மாஜா,திர்மிதி]
அன்பு தாய்மார்களே!நெஞ்சின் மீது கை வைத்து சொல்லுங்கள்!நம்மில் எத்தனை பேர் இந்த சிபாரிசுக்கு தகுதி பெற்றுள்ளோம்?நம் பிள்ளைகளில் எத்தனை பேரை நம்மை சுவனத்திற்கு அழைத்து செல்லும் தகுதியில் வளர்த்துள்ளோம்?
நம் பிள்ளைகள் சினிமா பாடல்களை மனனமாக பாடினால் அதை பெருமையாக சொல்லி சொல்லி மகிழ்கிறோமே?அதற்கு தோதுவாக டான்ஸ் ஆடினாலோ கேட்கவே வேண்டாம்  நாம் அந்தரத்தில்  பறப்பது போன்று ஆனந்தமடைகிறோமே?இது கேவலம் இல்லையா?
சூப்பர் ஹிட் பாடல்களில் பத்து பாடல்கள் மனனம் செய்தால் சூப்பர் சொர்க்கம் கிடைக்கும் என்று யாராவது கூறியுள்ளார்களா?
ஆனால் அறிந்து கொள்ளுங்கள்!
அண்ணல் நபியின் அமுத வாக்கு ஒன்று:மறுமையில் குர்ஆன் உடையவரை நோக்கி ஒதுவாயாக!உலகில் நீ அழகு பட ஓதியதை போல இப்போதும் ஓதுவாயாக!எங்கே சென்று ஓதுவதை நீ நிருத்துவாயோ அங்குதான் உனது அந்தஸ்து உள்ளது என்று அல்லாஹ் கூறுவான்.[நூல்:திர்மிதி]
இதன் பொருள் என்ன தெரியுமா?பத்து ஆயத் என்றால் பத்து அந்தஸ்து,,நூறு ஆயத் மனனம் செய்தால் நூறு அந்தஸ்து என்று நாம் மனனம் செய்துள்ள குர்ஆன் வசனங்களை கொண்டுதான் நம் பதவிகள் நிர்ணயம் செய்யப்படும்,
அன்பான பெரியார்களே!இந்த சூழ்நிலையில் நமது அந்தஸ்து என்ன?ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
குர்ஆனை கற்று அதன் படி செயல்பட்டவரின் பெற்றோருக்கு மறுமையில் ஒளிமிக்க கிரீடம் அணிவக்கப்படும் அதன் ஒளி நமது வீட்டுக்குள் சூரியன் வந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு பிரகாசிக்கும் என்று பூமான் நபி போதித்தது நம் காதுகளில் ஏன் விழவில்லை?
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை மூலம் சொத்து சேர்கிறோம் புத்தி கலங்கி போகும் அந்த மறுமைக்காக எதை சேர்த்தோம்?
அன்பர்களே!எந்த வீட்டில் அருள் மறை ஓதப்படுமோ அங்கு அல்லாஹ்வின் அமைதி இறங்கும் அருள் மிகும் மலக்குகள் அங்கு கூடி விடுவர் என்பது நபி மொழி,இன்று நம் வீடுகளில் அமைதி உண்டா? இல்லை அருள்தான் உண்டா?ஏன் இல்லை என்றைக்காவது சிந்தித்தோமா?
உயிர் போகும் நேரம் தொலைவில் இல்லை,நம் கையில் எடுக்கும் உணவு வாயை அடையும் முன் மரணம் வந்து விடலாம்.ஒரு ஸலாம் கொடுத்து மறு ஸலாம் கொடுக்கும் முன் இறப்பு நம்மை இராய்ஞ்சி சென்று விடலாம்.
மனைவியிடம் தண்ணீர் கேட்டவர் அது வருவதற்குள் மாரடைப்பில் இறந்தார்,புதுமண தம்பதிகளை ஏற்றி சென்ற வேன் புளிய மரத்தில் மோதி அதே இடத்தில் அனைவரும் மாண்டனர்,என்பன போன்ற  செய்திகள் ஊசலாடும் நம் உறுதியற்ற வாழ்வின் இலட்சனத்தையல்லவா சொல்கிறது,அதன் மூலம் பாடம் படிப்பது எப்போது?
அன்பு உள்ளங்களே!சமூகத்தை சீரழித்து நம் அமைதியை உருக்குலைத்து நம் வாழ்வை நிலை குலைய செய்யும் டெலிவிஷன்களை மூட்டைக்கட்டி அவற்றுக்கு மூடு விழா நடத்துவோம்,அன்பு அமைதி அருள் ஆனந்தம் அழகிய நடத்தைகளை அள்ளி தரும் அருள் மறை குர்ஆனை தூசி தட்டி எடுத்து தினமும் அதனை  ஓதி தூய வழியில் நடை போடுவோம், 
யா அல்லாஹ் குர்ஆனின் மூலம் எங்களின் வாழ்வை ஒளி பெறச்செய்!எங்களின் குணங்களை அழகாக்கி வை!அதைக்கொண்டு நரக விடுதலையைத்தா!அந்த மறை மூலம் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச்செய்!இந்த குர்ஆனை இம்மையிலும் மறுமையிலும் எங்களின் உற்ற தோழனாக்கி வைப்பாயாக!
பிரஹ்மத்திக்க யா அர்ஹமர்ராஹிமீன்!வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹ்

வரதச்சனை ஓர் சமூக தீமை.


நாமெல்லாம் முஸ்லிம்களாக பிறந்ததற்காக அல்லாஹ்வுக்கு மிகவும் நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளோம்.காரணம் இந்த மார்க்கத்தைக்கொண்டுதான் மறுமை நாளில் வெற்றி பெற்று மகிழ்சி நிறைந்த சுவனத்தை அடைய முடியும்.இந்த மார்க்கம் ஒரு அல்லாஹ்வின் அருள் அந்த அருளை நம் மீது பரிபூரமாக்கி வைத்துள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.இந்த வசனத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் பிரகடனம் செய்கிறார்கள்
 الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ
 இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; [அல் குர் ஆன்,5:3]
சங்கையானவர்களே!அல்லாஹ்வின் இந்த மார்க்கம் பரிபூரணத்தை உடையது என்று ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா?இந்த மார்க்கம் பேசாத எந்த துறையும் இந்த உலகில் இல்லை
வணக்கம்,வாணிபம்,கல்வி,நீதி,போர்,அரசியல்,வாழ்க்கை,திருமணம்,குழந்தை வளர்ப்பு,பரிசுத்தம்,நாகரீகம்,இப்படி இந்த உலக வாழ்வில் மனிதன் சந்திக்கும் அத்துனைப் பிரச்சினைகளுக்கும் இந்த மார்க்கம்வழிகாட்டும் கலங்கரையாகும்.
 இந்த முறைப்பேணி வாழ்ந்தால் வாழ்க்கையும் வணக்கமாகும்,இந்த முறை சாராத வணக்கம் கூட வழி கேடாகும் என்று திட்டவட்டமாக அறிவிப்பு செய்து திக்குத்தெரியாத யாவருக்கும் திசைக்காட்டி வாழ்க்கையில் தித்திப்பை ஊட்டுகிறது இந்த இஸ்லாம்.
அன்பானவர்களே!நமது வாழ்வில் இன்றியமையாத அதே நேரம் இனிமையான ஒரு தருணம்தான் திருமணம் என்பது, அந்த திருமணத்தை பற்றி சிலர் “திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது”என்று கூறுவார்கள்.ஆனால் நமது கண்மணி நாயகத்தின் வழிகாட்டல் சொல்லும் பாடம் என்ன தெரியுமா?
திருமணம் மனிதனின் கண்களையும் மானத்தையும் பாதுகாக்கிறது எனவே திருமணம் செய்யுங்கள்!-[புகாரி,முஸ்லிம்.]
உலகம் ஒரு சிற்றின்பம் சிறந்த மனைவிதான் [பேரின்பம் தரும்]பெரும் செல்வம், [முஸ்லிம்.]
நான்கு விஷயங்கள் எவரிடத்தில் இருக்குமோ அவர் இம்மை மறுமையின் அத்துனை நன்மைகளை[அதாவது மகிழ்ச்சி,சந்தோஷம்]அனைத்தையும் அடைந்து கொண்டார்,[ஒன்று]நன்றியுள்ள உள்ளம்.[இரண்டு]இறைவனை நினைத்து திக்ரு செய்யும் நாவு.[மூன்று]துன்பங்களை தாங்கி கொள்ளும் உடல்.[நான்கு]தன் மூலமோ தன் கணவனின் பொருள் மூலமோ தான் கணவனுக்கு மோசம் செய்யாத சாலிஹான மனைவி.[ஆதாரம்:தப்ரானி]
கண்ணியமிக்கவர்களே!இந்த பூமான் நபியின் பொன் மொழிகள் நமக்கு புகட்டும் பாடம் என்ன தெரியுமா?பூரிப்பும் பெருமிதமும் நிறைந்த புனித சுவனம் வேறெங்கும் இல்லை அல்லாஹ் ரசூல் காட்டிய வழிமுறையில் தன் வாழ்வை அமைத்துக்கொண்டால் நமது திருமணம் ஒரு சொர்க்கப்பாதை,
ஆனால் இன்று நடப்பதென்ன?
திருமணம் பலரை தீக்கங்குகளாக சுடுகின்றன,பெண்ணை பெற்றவர்களை பெரும் சுனாமியாக மிரட்டுகிறது,கன்னிப்பெண்களை கண்ணீர் வடித்து கதற வைக்கிறது.பலருக்கு பஞ்சனை கூட பயங்கர நரகமாய் போய் விடுகிறது.இவ்வளவு சிரமங்களோடு திருமணம் நடந்தாலும் அந்த வாழ்வில் நிம்மதி என்பது பூஜ்யமாகி தரித்திரம் தலை விரித்தாடுகிறதே?ஏன்?
அனாச்சாரங்களின் ஆணிவேர்களில் வளர்ந்த வாழ்க்கை விருட்சம் வசந்தத்தை எப்படி தரும்?
இலட்சியமில்லாமல் இலட்சங்களை அள்ளி இறைத்து நடத்தப்படும் கல்யாணம் பரக்கத்தை எப்படி பொழியும்?
   وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ
 நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடுகொடுத்துவிடுங்கள். [அல்குர்ஆன்.4:4]
என்று நம்மைப் படைத்தவன் சொல்ல, இல்லை இல்லை கைக்கூலி வாங்கிதான் கல்யாணம் பண்ணுவேன் என்று காட்டுமிராண்டித்தனம் செய்தால் கவலைகளும்,கொடுமைகளும் ஓடி வந்து கட்டி அணைக்காமல் வேறென்ன செய்யும்.
அம்மா முஸாஃபர் நிக்கிறேன்மா!எதாவாது கொடுங்கம்மா!என்று கூப்பிடும் பிச்சைக்காரர்களை விட இந்த கௌரவ பிச்சைக்காரர்கள் மிகவும் டேஞ்சர்!
காரணம், தான் பெற்ற ஆண்பிள்ளைகளை பந்தய பொருளாக்கி கல்யாண சந்தையில் கட்டுப்பாடு இன்றி விளையாடும் சூதாடிகள் இவர்கள்,
பெண்பார்ப்பு என்றும், நிச்சயார்த்தம் என்றும், நாள் குறிப்பு என்றும்,இந்த கூட்டம் அடிக்கும் கொட்டம்  கொஞ்சமா நஞ்சமா?
சீர் என்றும் சீராட்டு என்றும்  சீதனம் என்றும் சீர்கேடுகளை இறக்குமதி செய்து சமூகத்தின் சாதனையாளர்களாக பெருமிதமடையும் இவர்கள், மறுமையில் சாதிக்கப்போவதென்ன?
செல்வந்தனாவது முக்கியமில்லை அன்பர்களே!அதை எப்படி சேகரித்தோம் என்பதுதான் முக்கியம்.
இறைத்தூதர் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:
இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ... அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்ற வனாவான். மேலும், மறுமை நாளில் அச்செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்" எனக் கூறினார்கள்.[புகாரி]
நாம் தொழுகிறோம்,நோன்பு வைக்கிறோம்,தான தர்மங்கள் செய்கிறோம்,இறை இல்லம் கஃபா சென்று ஹஜ் உம்ரா செய்கிறோம்,இவை அனைத்தும் எதற்காக?மறுமையின் வெற்றிக்காக அல்லவா?
ஆனால் நாம் செய்கின்ற சில காரியங்கள் பயங்கரமான அந்த மறுமையில் நம் நன்மைகளை அழித்து நம்மை ஏழைகளாக ஆக்கி கைசேதத்தோடு கண்ணீர் சிந்த வைக்கும் என்றால் அந்த காரியங்கள் தேவைதானா?இறை கோபத்தை சம்பாதித்தரும் அந்த வீண் பந்தா அவசிம்தானா?சொந்தம் சொத்து எதுவுமில்லாத அந்த நாளில் சுவனத்தை விட்டும் தடுக்கும் இந்த அவலம் நமக்கு வேண்டுமா?சொல்லுங்கள் தாய்மார்களே!
ஒருமுறை நமது உயிரினும் மேலான உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது தோழர்களை நோக்கி “பரம ஏழை யார்?”என்று வினா விடுத்தார்கள்,அதற்கு தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே!எவரிடம் செல்வமில்லையோ அவர்தான் பரம ஏழை”என பதில் கூறினார்கள்,நாமும் அவ்வாறுதான் சொல்வோம் இல்லையா?
ஆனால் அன்பர்களே!அண்ணல் நபி [ஸல்]அவர்கள் அதற்கு கூறிய வியாக்கியானம் நம்மை அதிர வைக்கறது,அப்படி என்ன அதிர்ச்சி,
நபியவர்கள் கூறினார்கள்:உண்மையான ஏழை யாரெனில் மறுமையில் ஒருவன் பெரிய நன்மையின் குவியலோடு வருவான் அந்த குவியலை ஒரு மலை மீது வைத்தாலும் அதுவும் அதன் பளு தாங்காது உடைந்து சிதைந்து விடும் ,அந்த நன்மையின் பெருக்கத்தினால் தான் வெற்றி பெறப்போவது உறுதி என்று அவன் கற்பனை செய்வான்,
அப்போதுதான் ஒரு அபாயம் நிகழும்.
சிலர் அவன் மீது குற்றம் கூறி வழக்கு தொடர்வார்கள்,அவர்களில் ஒருவர்”யாஅல்லாஹ் இவன் என்னை அடித்தான்”என்று கூறுவார்,இன்னொருவர் “இவன் என்னை திட்டினான் என்பார்,இன்னொருவர் “இவன் என் சொத்தை அநியாயமாக  எடுத்துக்கொண்டான் என்பார்.
வழக்காளிகள் ஒவ்வொருவருக்கும் இவனது நன்மைகளில் இருந்து எடுத்து பங்கு வைத்து கொடுக்கப்பட்டு அனைத்தும் தீர்ந்து போகும்.அதன் பிறகு ஒருவர் வந்து அவன்  மீது குற்றம் சுமத்துவான் ஆனால் அவருக்கு எடுத்து கொடுக்க இவனிடம் நன்மை எதுவும் இல்லாததால் அந்த வழக்காளியின் பாவம் இவன் மீது சுமத்தப்படும்,
என்ன கைசேதம் பாருங்கள்!மலை போன்று நன்மைகளை  கொண்டு வந்தவன் அவை அனைத்தையும் இழந்து விட்டு அடுத்தவனின் பாவங்களையும் சேர்த்து சுமந்தவனாக [கவலையோடும் கை சேதத்தோடும் கண்ணீரோடும்]நரகத்தில் நுழைகிறான்,ஏழைகளில் பரம ஏழை இவன்தான்.என்று நபி[ஸல்]அவர்கள் விளக்கினார்கள்.
நவூது பில்லாஹ்!அல்லாஹ் நம்மை காப்பானாக!பெண்ணை பெற்று பொத்தி பொத்தி வளர்த்து கண்ணியமான கன்னியாக ஒருவனிடம் ஒப்படைக்கும் போது அவன் கரும்பு தின்ன காசு கேட்ப்பதை போல கைக்கூலி கேட்ப்பது அணியாயமில்லையா?
அன்பு தாய்மார்களே!தனியாக சமையலுக்கு ஒருத்தியை ஏற்படுத்தி அவளுக்கு கூலி கொடுக்கிறீர்கள்,துணி துவைக்க ஒருத்தியை வைத்து அவளுக்கு கூலி கொடுக்கிறீர்கள்,பாத்திரம் தேக்க ஒருத்தியை வைத்து அவளுக்கு கூலி கொடுக்கிறீர்கள்,இப்படி வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்கும் நீங்கள் உங்கள் வீட்டில் சமையல் காரியாக துணி துவைப்பவளாக,பாத்திரம் தெய்ப்பவளாக, உங்கள் மகனுக்காக தன்னையே கொடுத்து உங்க குடும்ப  பிச்சலங்கள் உலகில் நடமாட தன் வயிற்றை தொட்டிலாக்கி தன் இரத்தத்தை உணவாக்கி உங்கள் வீடே கதி என்று தன் தாய் வீட்டை துறந்து பெரும் தியாகியாக வாழப்போகும்  உங்கள் மருமகளுக்கு கூலி கொடுத்தீர்களா? கூலி வாங்கினீர்களா?இது என்ன நியாயம்,இது கொடுமை இல்லையா?இதற்கு அல்லாஹ்விடம் என்ன காரணம் சொல்வீர்கள்?
அன்று அரபுகள் அறியாமைக் காலத்தில் பெண் பிள்ளைகளை பிறந்தவுடன் உயிருடன் புதைத்தார்கள் அவர்களை கற்கால மக்கள் என்று சரித்திரம் பேசுகிறது,
இன்று வளர்த்தவர்களிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டு அவர்களின் கண்ணுக்கு முன்னாலே இந்த பேதை பெண்ணை அணு அணுவாக கொல்லாமல் கொள்கிறீர்களே?உங்களை என்ன பெயர் சூட்டி அழைப்பது?
கருணை நபியவர்கள் கூறினார்கள்:
الظلم ظلمات يوم القيامة  [அள்ளுல்மு ளுலுமாதுன் யவ்மல் கியாமாஹ்]உலகில் செய்யும் அநியாயம் மறுமையில் பல இருள்களாக வரும்,
அன்பு மிக்கவர்களே!பிறந்த எவரும் நிரந்தரமாய் வாழ்ந்ததாக சரித்திரமில்லை,நாம் பிறந்த அன்று முதல் மரணத்தை நோக்கி நம் பயணம் துவங்கி விட்டது அது எப்போது முடியும் யாருக்கும் தெரியாது,
கண்மூடும் அந்த நேரம்,கப்ரில் புதைக்கப்படும் அந்த தருணம்,அங்கிருந்து எழுப்பப்படும் மஹ்ஷர் மைதானம்,சிராத் பாலத்தை கடக்கும் அந்த சமயம்,இந்த நேரம் அனைத்தும் எல்லோரும் எல்லாரையும் மறக்கும் நேரம் நம் சொந்தமோ நம் சொத்துக்களோ அங்கு உதவிக்கு வராது,நம் நல்ல காரியங்கள் மட்டுமே உதவி செய்யும்.
எனவே வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாகிய திருமணம் நபி வழியின் அடிப்படையில் நடை பெருமானால் நம் வாழ்வும் நம் பிள்ளைகள் வாழ்வும் வளமாகவும் வணக்கமாகவும் மாறும்,அதற்காக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் கைக்கூலி இல்லாத திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும்,
வரதட்சணை கொடுத்து என் பெண்ணை கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று பெண் வீட்டாரும், வரதட்சணை வாங்கி  என் மகனுக்கு திருமணம் செய்யமாட்டேன் என்று ஆண் வீட்டாரும் இறை அச்சத்துடன் ஒரே உறுதியாய் இருக்கணும்,
 வரதட்சணை வாங்கினால் நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஓர் ஆணும், வரதட்சணை கொடுத்தால் நான் கல்யாணம் செய்யமாட்டேன் என்று ஓர் பெண்ணும் உறுதியாய் இருக்கணும்,
வரதட்சணை வாங்கப்பட்ட கல்யாணத்தை, அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்!

இந்த உறுதி வெறுமனே உண்டாகாது மாறாக மார்க்க அறிவும் அதன் படி நடப்பதின் முக்கியத்துவமும் நம் பிள்ளைகளுக்கு விளக்கப்பட வேண்டும்.

அருள் மறை குர்ஆன் அன்றாடம் பொருள் அறிந்து ஓதப்படுவதோடு அல்லாஹ்வின் நல்லடியார்களின் வரலாறுகள் வீடுகளில் பேசப்பட வேண்டும்.

இம்மையின் இழி நிலைகளும் மறுமையின் முக்கியதத்துவமும் இளமையிலேயே இதயங்களில் விதைக்கப்பட வேண்டும்.

ஹலாலின் அவசியமும் ஹராமின் அபாயமும் அவசியமாக அனைவருக்கும் போதிக்கப் பட வேண்டும்.

அன்பான தாய்மார்களே!அனாச்சாரங்களை அறுத்தெரிவோம்,வரதச்சனை அரக்கனை விரட்டியடிப்போம்.வெற்றியின் விடிவெள்ளி உதயமாகிட,வேற்று சடங்குகளை உதறித்தள்ளுவோம்,
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!ஆமீன் யாரப்பல் ஆலமீன் வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.